நீங்கள் ஐபோட்டில் பாட்டு கேட்டுக் கொண்டே பயணம் செய்து கொண்டிருக்கும் போது, அதில் உள்ள பற்றரியில் மின்சாரம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? பாட்டு கேட்க முடியாமல் போகுமே? என கவலைப்படுகிறீர்களா? இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று, நீங்கள் அணியும் ஷூ மூலம் ஐபோட் பற்றரியை சார்ஜ் செய்து கொள்ளும் சாதனம் ஒன்றை கண்டுபிடித்துள்ளது. ஜப்பானின் முன்னணி தொலைத் தொடர்புத்துறை நிறுவனமான என்.டி.டி., மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஷூவை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. தண்ணீர் நிரப்பப்பட்ட ஷூவின் கீழ் பகுதியில்(சோல்) சிறிய ஜெனரேட்டர் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும், ஷூவின் அடிப்பகுதியில் அழுத்தம் ஏற்படுத்தப்படுகிறது. அதனால், தண்ணீர் சுழற்சியடைந்து சிறிய டர்பைனை இயக்குகிறது. அதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக என்டிடி., நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஷூ, 1.2 வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. ஐபோட் செயல்பட இந்தளவு மின்சாரம் போதுமானது. எந்த ளவுக்கு இந்த ஷூவை அணிந்து கொண்டு நடக்கிறோமோ, அந்தளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக, என்டிடி., நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, மொபைல் போன்களை இயக்குவதற்கு தேவைப்படும் 3 வோட்ஸ் மின்சாரத்தை இந்த ஷூ மூலம் உற்பத்தி செய்ய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் ஜப்பான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஷூக்கள், மின்சாரத்தை சேமித்து வைக்காது. ஆனால், உங்கள் போனை, இந்த ஷூவுடன் இணைத்துவிட்டு இஷ்டம்போல் நீங்கள் நடந்து சென்றால், தானாகவே மொபைல் போனில் சார்ஜ் ஏறும் என்றும், அதன் பிறகு அதை பயன்படுத்தி பேசலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த ஷூ ஜெனரேட்டரை பயன்படுத்த 2010ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், அப்போது தான் இது வர்த்தக ரீதியாக விற்பனைக்கும் வரும் என்று என்டிடி., நிறுவனம் அறிவித்துள்ளது.