MAHABHARATHAM IN TAMIL

Started by Private on Monday, February 14, 2022
Problem with this page?

Participants:

  • Private
    Geni member

Related Projects:

Private
2/14/2022 at 4:21 AM

மஹாபாரதம்(முழுவதும்)-பாகம்-6
..
ஆதிபர்வம்
..
சந்தனுவின் மைந்தர்கள்!
..
வைசம்பாயனர் மகாபாரதத்தை ஜனமேஜயன் என்ற மன்னனுக்கு சொல்லிக்கொண்டிருந்தார்..
.
வைசம்பாயனர் சொன்னார், "ஜனமேஜயனே,
திருமணச் சடங்குகள் முடிந்ததும், மன்னன் சந்தனு, அந்த அழகான மணமகளைத் தனது இல்லத்தில் அமர்த்தினான். விரைவில் சத்தியவதிக்குப் புத்திக்கூர்மையுள்ளவனாக ஒரு வீரமைந்தன் பிறந்தான். அவனுக்குச் சந்தனு, சித்திராங்கதன் என்று பெயரிட்டான். அவன் பெரும் சக்தியும் திறமையும் வாய்ந்தவனாக இருந்தான்.
பெரும் ஆற்றலைக்கொண்ட தலைவன் சந்தனு, சத்தியவதியிடம் மற்றொரு மகனையும் பெற்று அவனுக்கு விசித்திரவீரியன் என்று பெயரிட்டான். அவன் பெரும் வில்லாளியாக இருந்து, தனது தந்தைக்குப் பிறகு மன்னனான். விசித்திரவீரியன் பருவம் அடைவதற்கு முன்னரே, ஞானியான மன்னன் சந்தனு, தவிர்க்க முடியாத காலத்தின் தலையீடுகளை உணர்ந்தான்.
சந்தனு சொர்க்கத்திற்கு உயர்ந்த பின்னர், பீஷ்மன் தன்னைச் சத்தியவதியின் ஆணையின் கீழ் நிறுத்திக் கொண்டு, எதிரிகளை ஒடுக்குபவனும், தன் ஆற்றலால் அனைத்து ஏகாதிபதிகளையும் விரைவில் வீழ்த்தித் தனக்கு நிகராக எவனும் இல்லை என்று கருதியவனுமான சித்திராங்கதனை அரியணையில் ஏற்றினான்.
அவனால் மனிதர்களையும், அசுரர்களையும், தேவர்களையும் கூட வீழ்த்த முடியும் என்பதைக் கண்ட கந்தர்வர்களின் பலமிக்க மன்னன் சித்திராங்கதன், தன் பெயரின் நிமித்தமாகவே ஒரு மோதலுக்காக அவனை அணுகினான்.
பெரும் பலசாலிகளாக இருந்த அந்த கந்தர்வனுக்கும், குருக்களில் முதன்மையானவனுக்கும் இடையில் சரஸ்வதி நதிக்கரையில் உள்ள குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்த கடும் மோதல் நடந்தது.
அடர்த்தியான ஆயுதமழையின் சிறப்பியல்புகளைக் கொண்டதும், போராளிகள் ஒருவரையொருவர் சீற்றத்துடன் வீழ்த்திக் கொண்டதுமான அந்தப் பயங்கரப் போரில் பெரும் ஆற்றல் மேன்மையையோ, வஞ்சக உத்தியையோ கொண்ட கந்தர்வன், அந்தக் குரு இளவரசனை {சித்திராங்கதனைக்} கொன்றான்.
மனிதர்களில் முதன்மையானவனும், எதிரிகளை ஒடுக்குபவனுமான சித்திராங்கதனைக் கொன்ற அந்த கந்தர்வன் மீண்டும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.
ஓ மன்னா! பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திராங்கதன் கொல்லப்பட்ட பிறகு, சந்தனுவின் மைந்தன் பீஷ்மன், அவனது ஈமக்கடன்களைச் செய்தான்.
பிறகு அவன், பெரும் சக்தி கொண்ட விசித்திரவீரியன் சிறுவனாக இருந்த போதே அவனைக் குருக்களின் அரியணையில் அமர்த்தினான்.
விசித்திரவீரியன், பீஷ்மனின் அதிகாரத்தின் கீழ் தன்னை நிறுத்திக் கொண்டு, பிதுர்வழி வந்த தனது நாட்டை ஆண்டான்.
அறத்தின் விதிகளிலிலும் அனைத்துச் சட்டங்களிலும் ஞானம் கொண்ட பீஷ்மனை அவன் வழிபட்டு நின்றான்; பீஷ்மனும் தனது கடமைகளுக்குக் கட்டுப்பட்டு அவனைக் காத்து வந்தான்"
சித்திராங்கதன் கொல்லப்பட்டபிறகு, விசித்திரவீரியன் சிறுவனாக இருந்தாலும் அரியணை ஏறினான். பீஷ்மர் தன்னைச் சத்தியவதியின் கட்டளைக்குக் கீழ் அமர்த்திக் கொண்டு, அந்த அரசாங்கத்தை நடத்தினார்.
புத்திசாலிகளில் முதன்மையானவனான தனது தம்பிக்குத் {விசித்திரவீரியனுக்குத்} தக்க வயது வந்ததும், பீஷ்மர் அவனுக்குத் திருமணத்தைச் செய்துவைப்பதில் இதயம் கொண்டார்.
அந்நேரத்தில், அழகில் அப்சரஸ்களுக்கு இணையானவர்களான காசி மன்னனின் மூன்று மகழ்களும், ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு சுயம்வரத்தில் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப் போகின்றனர் என்பதைக் கேள்விப்பட்டார்.
தேர்வீரர்களில் முதன்மையானவரும், எதிரிகளை அழிப்பவருமான அந்தப் பீஷ்மர், தனது தாயின் கட்டளையை ஏற்று, வாரணாசிக்குத் தனித்தேரில் சென்றார்.
அனைத்துத் திசைகளிலிருந்தும் எண்ணற்ற ஏகாதிபதிகள் அங்கே வந்திருப்பதைக் கண்டார். தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கக் காத்திருக்கும் மூன்று மங்கையரையும் கண்டார்
(அங்கே கூடியிருந்த) மன்னர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டுக் கொண்டிருந்தபோது, பீஷ்மர் (தன் தம்பியின் சார்பாக) அந்தக் கன்னிகைகளைத் தேர்ந்தெடுத்தார்.
போரில் தாக்குபவர்களில் முதன்மையானவரான பீஷ்மர் அவர்களைத் தேரில் ஏற்றிக் கொண்டு, மேகங்களைப் போன்ற ஆழ்ந்த குரலில் அந்த மன்னர்களிடம்,"சாதனையாளன் ஒருவனை அழைத்து, மதிப்புமிக்க பல பரிசுகளுடன் சேர்த்து, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கன்னிகையை அவனுக்கு அளிக்கலாம் என ஞானிகள் வழிகாட்டியிருக்கின்றனர்.மேலும் சிலர் இரு பசுக்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர். சிலர் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு தங்கள் மகள்களை அளிக்கின்றனர், சிலர் பலத்தைப் பயன்படுத்தி கன்னிகைகெளைக் கவர்ந்து செல்கின்றனர். சிலர் கன்னிகையரின் சம்மதம் பெற்றும், சிலர் அவர்களுக்குப் போதையூட்டி சம்மதிக்கவைத்தும், சிலர் அந்த கன்னிகையரின் பெற்றோரிடம் சென்று, அவர்களின் சம்மதம் பெற்றும் மணக்கின்றனர். சிலர் வேள்வியில் தாங்கள் துணை புரிந்ததற்கான பரிசாகத் தங்கள் மனைவிகளைப் பெறுகின்றனர்.
இத்திருமணங்களில் கல்விமான்கள் எப்போதும் எட்டாவது வகையையே புகழ்கின்றனர். இருப்பினும் மன்னர்கள் ஐந்தாவது வகையான சுயம்வரத்தையே தங்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒரு சுயம்வரத்தில் கூடியிருக்கும் மன்னர்களுக்கு மத்தியில், எதிரிகளை அழித்துப் பலம் கொண்டு அபகரிக்கப்பட்ட மனைவியே ஒருவனுக்குப் பரிசைப் போன்றவள் என்று பல முனிவர்கள் சொல்கின்றனர். எனவே, ஏகாதிபதிகளே, நான் இந்த மங்கையரை பலத்தால் அபகரித்துச் செல்கிறேன். உங்களால் முடிந்தவரைச் சிறப்பாகப் போராடிப் பாருங்கள். ஒன்று என்னை அழியுங்கள் அல்லது என்னால் அழியுங்கள். ஓ ஏகாதிபதிகளே, நான் இங்கே போருக்குத் தயாராக இருக்கிறேன்" என்று சொல்லி அம்மங்கையரை தேரில் ஏற்றி, அங்கே கூடியிருந்து மன்னர்கள் மற்றும் காசி மன்னன் முன்னிலையில் இவ்வாறு சொன்னார் பீஷ்மர்.
பீஷ்மர், மங்கையரை அபகரித்து, மன்னர்களுக்குப் போர் அழைப்பு விடுத்துத் தனது தேரைச் செலுத்தினார்.இப்படி அறைகூவியழைக்கப்பட்ட ஏகாதிபதிகள் தங்கள் தோள்களைத் தட்டிக் கொண்டு, கோபத்தால் தங்கள் உதடுகளைக் கடித்துக் கொண்டு எழுந்து நின்றனர்.
பெரும் அவசரத்துடன் ஒவ்வொருவரும் தங்கள் ஆபரணங்களைத் துறந்து, போர் உடை தரித்தனர். அங்கே ஏற்பட்ட பெருங்கூச்சல் பேரொலியாக இருந்தது.
அவர்கள் அப்படித் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப் போர் உடை தரிக்கும்போது, அந்த ஆபரணங்களில் இருந்து எழுந்த ஒளி, வானத்தில் மின்னல் கீற்றுகளைப் போல இருந்தது.
கோபத்தால் புருவங்கள் சுருங்கி, கண்கள் சிவந்து இருந்த அந்த ஏகாதிபதிகள், பொறுமையைத் துறந்து, எழுந்து நடந்ததால் அவர்களது நடைக்கு ஏற்றாற்போல் அவர்களது ஆபரணங்களும் ஆடின.
அவர்கள் சிறந்த குதிரைகள் பூட்டப்பட்ட அழகான தேர்களைச் செலுத்திக் கொண்டு விரைவாக வந்தனர். அந்தச் சிறந்த போர்வீரர்கள் அனைத்து விதமான ஆயுதங்களையும் தரித்துத் தங்கள் தேர்களைச் செலுத்தி பீஷ்மரை நோக்கித் தங்கள் ஆயுதங்களை ஏந்தினர்.
, ஒரு புறத்தில் கணக்கிலடங்காதவர்களான அந்த அற்புதமான ஏகாதிபதிகளும், மறுபுறத்தில் குருக்களின் வீரர் {பீஷ்மர்} தன்னந்தனியாகவும் அணிவகுத்தனர். அப்படிக் கூடியிருந்த அந்த ஏகாதிபதிகள் அனைவரும் ஒரே நேரத்தில் தங்கள் எதிரியை நோக்கிப் பத்தாயிரம் கணைகளைச் செலுத்தினர். இருப்பினும், பீஷ்மர் கணக்கிலடங்காதவையான அக்கணைகளைத் தனது கணக்கிலடங்காக் கணைகளால் மிக விரைவாக தடுத்தார்.
அதன்பின், அந்த மன்னர்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு பெருமேகங்கள் கூடி மலையின் சாரலில் மழையைக் கொட்டுவதைப் போல, அனைத்துத் திசைகளிலிருந்தும் மழையெனத் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். ஆனால், பீஷ்மர் அவர்கள் தொடுத்த அனைத்துக் கணைகளையும் தடுத்தது மட்டுமில்லாமல், ஒவ்வொரு ஏகாதிபதியையும் மும்மூன்று கணைகளால் தைத்தார்.
பதிலுக்கு அந்த ஏகாதிபதிகள் ஒவ்வொருவரும் ஐந்து கணைகளைத் தொடுத்தனர். ஆனால், அவை அனைத்தையும் பீஷமர் தடுத்து, மேலும் இரு கணைகளால் அவர்களைத் தைத்தார்.
போர் மிக உக்கிரமானது, அடர்த்தியான கணைகள் மழையெனப் பொழிந்தன. அந்தப் போரைப் பார்ப்பதற்குத் தேவாசுரப் போர் நடப்பது போலத் தெரிந்தது. இந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களும், துணிச்சல்மிக்கவர்களுமான வீரர்கள்கூட, இந்தக் காட்சியைக் கண்டு அஞ்சினர்.
பீஷ்மர் பலரின் விற்கள், கொடிக் கம்பங்கள், மார்புக் கவசங்கள் ஆகியவற்றையும், எதிரிகளின் தலைகளையும் நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அறுத்தெறிந்தார்.
பயங்கரமான ஆற்றலினாலும், இயல்புக்கு மிக்கத் தனது கரநளினத்தாலும் அவர் தன்னைக் காத்துக் கொண்டார். இதைக் கண்ட எதிரி வீரர்களும் அவரை வெகுவாகப் பாராட்டினர்.
ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்களில் முதன்மையான அவர், அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி, அந்த மங்கையரை அழைத்துக் கொண்டு பாரதர்களின் தலைநகருக்கு {ஹஸ்தினாபுரத்திற்குத்} திரும்பினார்.
அப்போது, வலிமைமிக்கத் தேர்வீரனான மன்னன் சால்வன், சந்தனுவின் மைந்தனான பீஷ்மருக்குப் பின்னாலிருந்து போருக்கு அழைப்பு விடுத்தான். யானைக்கூட்டங்களுக்குத் தலைமையான யானை ஒன்று, பெண் யானையைக் கண்டதும், தனது தந்தங்களால் மற்ற யானைகளின் குடலைக் கிழித்தெரிய வருவது போல, அந்த மங்கையரை அடைவதில் விருப்பம் கொண்ட அவன் பீஷ்மரிடம் வேகமாக வந்தான். அப்படி வந்த சால்வன் கோபத்துடன், "நில், நிற்பாயாக" என்றான்.
எதிரிகளை அழிக்கும் மனிதர்களில் புலியான பீஷ்மர், இந்த வார்த்தைகளால் தூண்டப்பட்டு, சுடர்விட்டெரியும் நெருப்பைப் போன்ற கோபத்துடன், வில்லைத் தனது கையில் தாங்கிப் புருவம் சுருங்கி எதிரியின் வரவுக்காகத் தனது தேரில் காத்து நின்றார்.அவர் நிற்பதைக் கண்ட அனைத்து ஏகாதிபதிகளும், அங்கே சால்வனுக்கும் பீஷ்மருக்கும் இடையில் நடக்கப்போகும் பெரும்போரைக் காணும் பார்வையாளர்களாக நின்றனர்.
பசுவின் பார்வையைப் பெற்ற காளைகள் போல உறுமிக் கொண்டு இருவரும் தங்கள் வீரத்தை ஒருவர் மேல் ஒருவர் காண்பிக்கத் துவங்கினர். மனிதர்களில் முதன்மையான சால்வன், இலகுவான இறகுகள் கொண்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தனது கணைகளால் சந்தனுவின் மகனான பீஷ்மரை மறைத்தான்.
இவ்வாறு பீஷ்மரைச் சால்வன் மறைத்ததைக் கண்ட மன்னர்கள் அனைவரும் அவனை வெகுவாகப் பாராட்டினர்.அவனது கரத்தின் நளினத்தைக் கண்ட அந்தக் கூட்டம் பெரிதும் மகிழ்ந்து சால்வனை பேரொலியெழுப்பிப் பாராட்டியது.
எதிரிநாட்டு நகரங்களை அடக்கும் பீஷ்மர் அந்த க்ஷத்திரியர்களின் பேரொலி கேட்டு மிகவும் கோபம் கொண்டு, "நில், நிற்பாயாக" என்று சொல்லித் தனது தேரோட்டியிடம், "கருடன் பாம்பைக் கொல்வது போல, உடனே அவனைக் கொல்லும் விதத்தில் சால்வன் இருக்கும் இடத்திற்கு தேரைச் செலுத்துவாயாக" என்றார்.
பிறகு, அந்தக் குருக்களின் தலைவர் {பீஷ்மர்}, வாருண ஆயுதத்தைத் தனது வில்லின் நாணில் ஏற்றி, சால்வனின் நான்கு குதிரைகளின் மீது ஏவினார்.
அந்தக் குருக்களின் தலைவர் பீஷ்மர் எதிரிகளின் கணைகளை முறித்துச் சால்வனின் தேரோட்டியைக் கொன்றார்.
அந்த மங்கையருக்காகப் போரிடுபவரும், மனிதர்களில் முதன்மையானவரும் சந்தனுவின் மைந்தனுமான பீஷ்மர், ஐந்தராயுதத்தை ஏவி சல்லியனின் குதிரைகளைக் கொன்றார்.
சால்வனை வீழ்த்தினாலும், உயிருடன் மட்டுமே அவனை அங்கே விட்டுவிட்டு வந்தார்.
சால்வன் இந்தத் தோல்விக்குப் பிறகு தனது நாட்டுக்குத் திரும்பித் தொடர்ந்து அறம்சார்ந்த நல்லாட்சி செய்தான். சுயம்வரத்திற்கு வந்த அனைத்து மன்னர்களும் தங்கள் தங்கள் நாட்டுக்குத் திரும்பினர்.
பீஷ்மர் அந்த ஏகாதிபதிகள் அனைவரையும் வீழ்த்திவிட்டு, அம்மங்கையரைக் கவர்ந்து கொண்டு, ஏகாதிபதிகளில் சிறந்த சந்தனுவைப் போல குருக்களின் இளவரசன் விசித்திரவீரியன் அறம் சார்ந்து ஆண்டுகொண்டிருக்கும் ஹஸ்தினாபுரம் நோக்கிச் சென்றார்
வழியில் பல கானகங்களையும், நதிகளையும், மலைகளையும், மரங்கள் அடர்ந்த சோலைகளையும் கடந்து விரைவாகத் தலைநகர் வந்து சேர்ந்தார் பீஷ்மர்.
போரில் அளவிலா ஆற்றல் கொண்டவரும், பெருங்கடலுக்குச் செல்பவளான கங்கையின் மைந்தனுமான பீஷ்மர், தன் மேனியில் சிறு கீறலும் இன்றி போரில் எண்ணற்ற எதிரிகளைக் கொன்று, காசி மன்னனின் மகள்களை ஏதோ அவர்கள் தமது சொந்த மருமகள்கள், அல்லது தங்கைகள், அல்லது மகள்கள் என்பது போல மிக மென்மையாகக் கொண்டு வந்தார். பெரும் பலம் வாய்ந்த பீஷ்மர், தமது தம்பிக்கு நன்மை செய்ய விரும்பி, தகுதி வாய்ந்தவனான விசித்திர வீரியனுக்கு தம்மாற்றலால் கொண்டவரப்பட்ட அந்த மங்கையரைக் காணிக்கையாக அளித்தார்.
அறத்தின் விதிகளை நன்றாக அறிந்த அந்தச் சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், மன்னர் குலத்தின் வழக்கத்தின்படி செயற்கரிய செயல் செய்துவிட்டுத் தனது தம்பியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளைக் கவனித்தார். சத்தியவதியின் ஆலோசனையின்படித் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் பீஷ்மரால் செய்யப்பட்ட பிறகு, காசி மன்னனின் மூத்த மகள் அம்பை, மெல்லிய புன்னகையுடன், அவரிடம் இந்த வார்த்தைகளைக் கூறினாள்,
"இதயத்தால் நான் மன்னன் சௌபரைக் {சால்வ மன்னனைக்} கணவராகத் தேர்ந்தெடுத்துவிட்டேன். அவரும், தனது இதயத்தால் என்னை மனைவியாக ஏற்றுக் கொண்டார். இஃது எனது தந்தையாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தச் சுயம்வரத்தில் நான் அவரையே எனது தலைவனாகத் தேர்ந்தெடுப்பதாக இருந்தேன். அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவர் நீர், இஃதையும் அறிந்து, முறையாகச் செய்ய வேண்டியதைச் செய்வீராக" என்றாள்.
பிராமணர்கள் முன்னிலையில் அந்த மங்கை இப்படிச் சொன்னதும், பீஷ்மர் என்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்துச் சிந்தித்தார்.அவர் அறத்தின் விதிகளை நன்கு அறிந்திருந்தார். வேதமறிந்த பிராமணர்களிடம் ஆலோசித்துக் காசி மன்னனின் மூத்த மகள் அம்பையை, அவள் விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ள அனுமதி கொடுத்தார்.
பிறகு மற்ற இரு மங்கையரான அம்பிகை மற்றும் அம்பாலிகையைத் தனது இளைய தம்பியான விசித்திரவீரியனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
விசித்திரவீரியன் அறம்சார்ந்தவனாகவும், எதையும் அதிக அளவு உண்ணாதவனாக இருந்தாலும், தான் கொண்ட இளமையாலும், அழகாலும் பெருமிதம் கொண்டு, தனது திருமணத்திற்குப் பிறகு காமத்திற்கு அடிமையானான்.
அனைத்து அதிர்ஷ்டக் குறிகளும் கொண்ட அந்த இனிமையான இளம் மங்கையர், தாங்கள் சரியான துணைக்கே மணம் செய்து கொடுக்கப்பட்டதாக நினைத்து அகம் மகிழ்ந்து விசித்திரவீரியனிடம் அன்பாகவும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.
தெய்வீக ஆற்றலையும், அசுவினி இரட்டையர்களின் அழகையும் பெற்றிருந்த விசித்திரவீரியனும் கூட, எந்த அழகான பெண்ணின் இதயத்தையும் களவாடவல்லவனாகவே இருந்தான்.
அந்த இளவரசன் ஏழு வருடங்கள் தடையில்லாமல் தன் மனைவியரின் நெருக்கத்தில் சுகமாக வாழ்ந்தான். ஆனால், இளமையின் தொடக்கத்திலேயே அவன் காச நோயால் தாக்கப்பட்டான்.
நண்பர்களும் உறவினர்களும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்து இதற்கான தீர்வைக் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்கள் எவ்வளவு முயன்றும் குருக்களின் இளவரசன் மறையும் சூரியனைப் போல இறந்து போனான்.
அறம் சார்ந்த பீஷ்மர் கவலையிலும் துயரத்திலும் மூழ்கிப் போனார். சத்தியவதியிடம் ஆலோசித்து குரு பரம்பரையினர் சூழ கல்விமான்களான பண்டிதர்களை வைத்துத் தனது தம்பியின் ஈமக்கடன்களைச் செய்தார்"
வைசம்பாயனர் சொன்னார்,
"பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,
"பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.
நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.
ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ. நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.
எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா? வேண்டாமா? என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.
ஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான விசித்திரவீரியன், இளம் வயதிலேயே பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.
எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.
நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே" என்றாள்.
"இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,
"ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.
உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.
நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், சத்தியத்தைத் துறக்க மாட்டேன்.
பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,
சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந்திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,
இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது" என்றார்.
சக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,
"ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.
எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.
ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக" என்றாள்.
பிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,
"ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ! இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன்.
சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.
நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்" என்றார் பீஷ்மர்

Create a free account or login to participate in this discussion