ASHVASENAN THE SNAKE IN MAHABHARATA WAR

Started by Private User on Wednesday, June 17, 2020
Problem with this page?

Participants:

  • Private User
    Geni member

Related Projects:

Private User
6/17/2020 at 4:14 AM

ASHVASENAN THE SNAKE (MAHABHARATA WAR)

#கண்ணா!
உன் சத்தியத்தை
நீ மீறும் வண்ணம்
நான் நடக்க மாட்டேன்!
கர்ணனும், சல்லியனும் சேர்ந்தாலும்
எனக்கு இணையாக மாட்டார்கள்!!
இன்று கர்ணனின் வதம்
கட்டாயம் நடக்கும்!!
மதயானை ஒன்றினால்
வேரோடு பிடுங்கப்பட்ட #விருட்சமாய்
அந்தக் கர்ணன்
#இன்று #வீழ்வான்!!
இந்தச் செய்தியை
என் மருமகளிடம் இன்று நீ
கட்டாயம் சொல்வாய் கண்ணா!!
இரு பக்க சேனைகளும்
இருவராலும் பந்தாடப்பட்டன!!
சிதறியன இரு பக்கச் சேனைகளும்!!
ஒரு கோர யுத்தம் அங்கே நடைபெறுவதை
துரியன் உணர்ந்தான்!!
#அசுவத்தாமனே!
கர்ணன் இன்று களத்தினிலே
கனலாய்த் தெரிகிறான்!!
இன்று ஒரு பெரிய வெற்றியை
நாம் சுவைப்போம்!!
#துரியோதனா!
தவறாய் நினைக்காதே!
அது கட்டாயம் நடக்காது!
கர்ணன் என் பிரிய நண்பன்!
அவன் இன்று
களத்தில் மாள்வான்!
ஆனால் இப்போதும் அது
உன்னால் தடுக்கப்படலாம்!
நமது கணைகள்
பொய்த்துப் போவதை
நான் கண் கூடாகக் காண்கிறேன்!
கர்ணனின் அத்திரமும்
அர்ச்சுனனிடம் தோற்கும்!!
இது தெய்வத்தின் செயலே!!
இன்னமும் உன் நலம் விரும்பியே நான்!!
தர்மனை இங்கே அழை!
சமாதானத்திற்காய்
அழைப்பு விடு!
பகைமைகளை மறந்துவிடு!
தர்மனின் பேச்சை அவன்
தம்பிகள் கேட்பார்கள்!!
யுத்தம் நின்று போகும்!!
கர்ணனும், நீயும்
இப்புவியில் நிலைப்பீர்கள்!!
இன்னொன்றையும் உணர்வாய்!
உயிருடன் இருந்தால்தான்
எதனையுமே உணர முடியும்!!
வெற்றிகளை உணர முடியும்!!
இன்பங்களை நுகர முடியும்!!
அரசும் மீண்டும் வரும்!!
சுகமும், வெற்றியும்
திரும்பப் பெறலாம்!!
பாண்டவர்கள் உன்னைக்
கட்டாயம் மதிப்பார்கள்!!
இழந்தவைகளே போதுமானது!!
இருப்பதையாவது
காத்துக் கொள்!!
அசுவத்தாமனே!
#எது #சுகம்?
என் தம்பி மார் பிளந்து
குருதியினை பீமன் குடித்ததை
நினைத்துக் கொண்டே
உயிர் வாழ்தல் சுகமா?
கௌரவர்கள் என்ற பன்மையை,
என்னை ஒற்றையாக்கி,
ஒருமையாக்கிய நிலையை
நினைத்து தினம்
வாழ்வது சுகமா?
என்னைப் பற்றிச்
சொன்னதில் கூட
எனக்குத் துளியும் வருத்தமில்லை!
கர்ணன் மாள்வான் என
எப்படிச் சொல்கிறாய்?
அதுவே உன் விருப்பமா?
அர்ச்சுனனை வெல்லப் பிறந்தவன் கர்ணன்!
அர்ச்சுனனே கொல்லப்படுவான்!
சமாதானம் பேசச் சொல்கிறாய்!
உனக்கே அது கேலியாகத் தோன்றவில்லையா?
ஒருவேளை
கேலிதான் செய்கிறாயா?
அசுவத்தாமனே!
இப்படியெல்லாம்
பேசுவதைத் தவிர்த்து
பாண்டவ சேனைகளை
அடித்து நொறுக்கும்
வழியைப் பார்!!
நெருப்பைப் பொழியும்
#ஆக்னேயாஸ்திரத்தை
அர்ச்சுனன் ஏவினான்!!
அதனை அழிக்க
#வருணாஸ்திரத்தைக்
கர்ணன் ஏவினான்!!
இருளைக் கொடுக்கும்
#பர்ஜன்யாஸ்திரத்தை
கர்ணன் ஏவினான்!!
அதனை விலக்க
#வாயுவாஸ்திரத்தை
அர்ச்சுனன் ஏவினான்!!
இந்திரனின் #வஜ்ராஸ்திரத்தை
அர்ச்சுனன் ஏவினான்!!
அந்த ஒற்றைக் கணை
ஆயிரம் கிளைகளாக மாறிக்
கர்ணனைத் தாக்க வர,
கொள்ளைப் பசியில் இருப்பவன்
ஆகாரத்தை உண்பதுபோல்,
அவற்றை #முறித்தான் #கர்ணன்!!
அர்ச்சுனா!
உன் கணைகள் எப்படிப் பொய்க்கலாம்?
என்ன நடக்கிறது?
உனது வீரம் குறைந்துவிட்டதா?
உனது சபதத்திற்காகத்தான்
அவனை விட்டு வைத்துள்ளேன்!!
என் கதையாலேயே
அவனைக் கொன்றுவிடுவேன்!!
அர்ச்சுனா!
பீமன் சொல்வது சரிதானே!
உனது அத்திரங்கள்
அவனால் தடுக்கப்படுகின்றது என்றால்
அது கர்ணனின் வீரமா?
இல்லை உன் வேகம் குறைந்துவிட்டதா?
பரமசிவனே உன் அத்திரங்களால்
பலமாகத் தாக்கப்பட்டு
மறைந்து போன கதை
நான் அறிவேன்!!
இவனும் பரமசிவன் அல்ல!!
நீயும் முந்தைய
அர்ச்சுனன் அல்ல!!
கண்ணா!
நீயும், பீமனும்
ஏன் வார்த்தைகளால் கொல்கிறீர்கள்?
சில நாட்களில் சிலரின் பலம்
கூடுதலாய்த்தான் தெரியும்!!
இன்று கர்ணனின் வரிசை!
அவ்வளவுதான்!
ஆனாலும் இன்று அவன் அடங்கிப்போவான்!!
பீமனின் வார்த்தைகளும்
கண்ணனின் வார்த்தைகளும்
அர்ச்சுனனின் கோபத் தீயில்
நெய்யை வார்க்க,
எதிரியர் சேனையை
தீயாய்ப் பொசுக்கினான் அர்ச்சுனன்!!
சிதறின கௌரவர் சேனை!!
அர்ச்சுனன் மீது
#நாகாஸ்திரத்தை
ஏவுவது எனக்
கர்ணன் முடிவெடுத்தான்!!
வில்லினை எடுத்தான்!
நாகாஸ்திரத்தைப் பொருத்தினான்!!
காண்டவ வனம்
எரிக்கப்பட்ட போது
தம் இனத்தின் அழிவிற்குக்
காரணமாய் இருந்த
அர்ச்சுனனைக் கொல்ல
#அஸ்வசேனன் என்னும் பாம்பு
அதுவரைக் காத்திருந்தது!!
இதுதான் சமயமென
கர்ணன் பூட்டிய நாகாஸ்திரத்தில்
தன்னைப்
பொருத்திக் கொண்டது !!
அதனைக் கண்டான் #இந்திரன்!!
என் மகனை
இந்த பொல்லாத நாகம்
இன்று பழி தீர்த்து விடுமா?
என இந்திரன் ஏங்க
கண்ணன் இருக்க
வீண் கவலை உனக்கெதற்கு? எனபிரம்மன்
அவனைத் தேற்றினார்!!
அஸ்வசேனன் என்ற அந்நாகம்
தன் அத்திரத்தில் குடியேறியதை
கர்ணன் அறியான்!!
அத்திரத்தை வில்லிலே
பூட்டிய அவன்
அர்ச்சுனனின் தலையினைக் குறி வைத்தான்!!
தடுத்தான் #சல்லியன்!!
கர்ணனே!
தலையினைக்
குறி வைக்காதே!!
அர்ச்சுனனின்
மார்பினைக் குறிவை!!
சல்லியனே!
குறியினை மாற்றி வைக்கும்
வழக்கமே எனக்கில்லை!!
குறிகளை மாறி மாறி வைத்து
எதிரிகளை ஏமாற்றும்
கபட வித்தைகளையெல்லாம்
நான் கற்றவன் இல்லை!!
என் குறி தப்பாது!!
அர்ச்சுனனின் சிரத்தை
இந்த அத்திரம் கொய்து வரும்!!
கணையினை ஏவினான்!
அர்ச்சுனனின்
கழுத்தினை நோக்கிப்
பாய்ந்து வந்தது அக்கணை!!
அர்ச்சுனன் முடிந்தான்! என
அக்களமே நினைத்திருக்க,
தன் பக்தனைக் காக்க,
தனது இரதத்தினை
சில அங்குலங்கள்
#பூமியில் #அழுத்தினான் கண்ணன்!!
தலையை நோக்கி வந்த
அக் கணையானது
கிரீடத்தினை மட்டுமே
தாக்க முடிந்தது!!
இந்திரன் தன் மகனுக்கு
ஆசையாய்க் கொடுத்த அக்கிரீடம்
#சுக்கு #நூறாய் #சிதறியது!!
#மகாபாரதம் (169)

Create a free account or login to participate in this discussion