Apr 2, 2020,
ஸ்ரீ ராம ஜனனம்
இந்தியாவுக்கு ஒரு தனிச் சிறப்பு என்ன தெரியுமா. இன்றுவரை அதிகம் ஹிந்துக்கள் வசிக்கும் நாடு. இனிமேல் வருங்காலத்தில் எப்படியோ? பல் வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட மக்கள். . விவேகானந்தர் அடிக்கடி சொல்வாரே வேற்றுமையிலும் ஒற்றுமை (unity in diversity) அதே தான்.
ராமன் சம்பந்தப்பட்ட, ராமாயண கால நிகழ்ச்சிகள் பல ரூபங்களில் ஊருக்கு ஊர் மாறுதலோடு காணப்பட்டாலும் அத்தனையும் அற்புதமான காரணங்களோடு விளக்கப்படும். ராமர் நம்மைப்போலவே ஒரு காலத்தில் இருந்தவர் தான் என்று புரிய வைக்கும். இதுவும் ஒரு விதத்தில் ராமாயணம் என்றும் அழியாத காவியமாக நிலைத்திருக்க ஒரு காரணம்.
ஊர்மக்கள் கூற்று ஒரு புறம் இருக்கட்டும். புதைபொருள் ஆராய்ச்சி, சரித்திர ஆதராரங்கள், இலக்கிய, சாஸ்திர வேத நூல்கள், புராணங்கள், புலவர்கள், கவிஞர்கள் எழுதி வைத்தது, கூறுவது, நாட்டுப்பாடல்கள், கூத்துகள், சாராம்சம் இவற்றினாலும் ராமாய ணம் வாழ்ந்தது, இன்னும் வாழ்கிறது. இனிக்கிறது. ஆளுக்கு ஆள் ஏதேதோ சொல்லும்போது கொஞ்சம் அங்கங்கே உதைக்கும். வேறுபடும். . அதனால் என்ன?. ராமன் என்றும் உள்ளான். ராமனோ
ராமாயணமோ கட்டுக்கதை அல்ல, ஒரு உண்மையின் நிருபணம். இலங்கையில் ஆடம் ப்ரிட்ஜ் இருக்கும் வரை, சேது பாலம் அழியாத வரை, கொஞ்சம் மண்ணை முதுகில் தடவி கடலில் சேர்த்த அணில் முதுகில் மூன்று கோடுகள் இருக்கும் வரை ராமாயணமும் ராமனும் நமக்கு மறக்காது. .
எப்போதுமே எது ரொம்ப மோசமோ, உயர்ந்ததோ, அது மட்டுமே ஞாபகத்தில் நிற்கும். ராமனை நாம் 7000 வருஷங்களுக்கு அப்புறமும் நினைக்கிறோம் , படிக்கிறோம், பாடுகிறோம், புகழ்கிறோம், வணங்குகிறோம். ஏன்? ராமன் ஒரு உன்னத புருஷன், ஈடற்ற மனிதன், அரசன், உதாரணன். இது உயர்ந்த குணம் பண்பு. கடைசி ஹிந்து வரை மறக்கமாட்டேன். நடுவில் யாராவது என்ஜினீயரா, டாக்டரா , வக்கீலா என்று கவலைப்பட்டால் கணக்கில் வராது.
ராமனை உலகமே புகழ்கிறது. தென் கிழக்கு ஆசிய நாடுகளில், பர்மா, தாய்லாந்த், இந்தோனேசியா, கம்போடியா, பிலிப்பைன் தீவுகள், வியட் னாம், மலேசியா, சிங்கபூர் இங்கெல்லாம் ராமாயணமும் ராமனும் நன்றாகவே பரிச்சயம்.
ஆப்ரிக்காவே ஒரு கால கட்டத்தில் குசத்வீபம் என்று பேர் கொண்டது. குசன் ராமனின் ஒரு பிள்ளை, அங்கு ஆட்சி புரிந்திருக்கிறான்.
கோவிலில் ராமனை விக்ரஹமாக பார்த்து வழிபட்டாலோ, ராமனை பற்றி கதை படித்தாலோ, பிரசங்கமாக கேட்டாலோ, டிவியில் பார்த்தாலோ, ராம நாடகப் பாட்டு கேட்டாலோ, நாமே தெரிந்தவரையில் பாடினாலோ, ஒருவித சந்தோஷம், உள்ளே ஏற்படுகிறதல்லவா. இதை அனேக கோடி மக்கள் இன்றும் அனுபவித்து வருகிறார்களே.
ராமன் பிறந்த நேரம், காலம், ஜாதக பலன் அனைத்தும் அநேக பண்டிதர்கள் அலசி வைத்திருக்கிறார்கள். ராம சகாப்தம் என்று ஒரு புத்தகம். எழுதினவர் புஷ்கர் பட்நகர் . ராமன் சரித்திர பூர்வமானவன். வால்மீகி, ராமன் காலத்தில் இருந்த ரிஷி. ராமன் அவதாரமான நேரம், அப்போது காணப்பட்ட கிரகங்கள் ,ராசிகள், நக்ஷத்ரங்கள், இவை எந்த இடத்தில் இருந்தன என்று ராமாயணத்தில் விலாவாரி யாக புட்டு புட்டு வைத்திருக்கிறார் வால்மீகி. இது ஒரு அதி உன்னதமான வான சாஸ்திர உண்மை. தற்கால விண்வெளி நிபுணர்கள் astro physics specialists இது சரியே என்று தலையாட் டுகிறார்கள். எனவே ராமாயணம் கட்டுக்கதை இல்லை. ராமனது வாழ்க்கையில் அந்த ஜாதக பலனின் செயல்பாடுகள் விளங்குகிறதே.
ராமனின் பிறந்த நேர ஜாதகம் காட்டும் ராசி, க்ரஹ, நக்ஷத்திர கூட்டமைப்பு லக்ஷக்கான வருஷங்களாகியும் மீண்டும் அதே போல் இன்னும் இதுவரை அமையவில்லையாம். பட்நகர் சொல்கிறார். இது மாதிரி யாராலும் கற்பனை கூட பண்ணக்கூட முடியாது. இது ஓர் அதிசயம் என்கிறார். இது இவ்வாறு நேரப் போகிறது என்று அறிந்து, முன்கூட்டியே தான் வால்மீகிக்கு அந்த பாக்யத்தை நாராயணனே கொடுத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். நமக்கு வேண்டுமே என்று நிதர்சனமாக பார்த்து இதை ராமாயணத்தில் வால்மீகியை எழுத வைத்திருக்கிறார்.
ராமாயணத்தில், ராமன் நவமி திதியில், சுக்ல பக்ஷத்தில், சைத்ர மாதத்தில், (ஒன்பதாம் நாள், வளர்பிறையில், புனர்பூச நக்ஷத்ரத்தில் பிறந்தான். அப்போது, சூரியன், செவ்வாய், சனி, புதன், சுக்ரன் எந்த க்ரஹத்தில் , எந்த ராசியில், லக்னம், என்ன என்று ராமாயணத்தில் ஸ்லோகம் 1.18.8,9 ல் வால்மீகி சொல்லி யிருக்கிறார்.
ராமன் பிறந்தபோது ''வசிஷ்ட மகரிஷி, நீங்களே இவனுக்கு ஒரு பெயர் வையுங்கள்'''' என்கிறார் தசரதர்.
யோசனையே பண்ணவில்லை வசிஷ்டர்
'''ராம '' என்று எல்லோராலும் இவன் வணங்கப் படுபவன்.''
யோசித்தால் ஏன் வசிஷ்ட மகரிஷி ''ராம'' என்ற பெயர் வைத்தார் என்பது புரியும்.
ஹிந்து சமயத்தில் அதிகம் சைவ வைணவர் கள் சைவர்கள் தொழ ஏற்றது ''ஓம் நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷரம். வைணவர்கள் ஏற்றது ''ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய'' என்ற அஷ்டாக்ஷரமும் . ''ரா'' என்ற அஷ்டாக்ஷர நாராயணாய மந்திரத்தின் ரெண்டாவது எழுத்தையும் ''நமசிவாய'' எனும் பஞ்சாக்ஷர மந்திர ரெண்டாவது எழுத்து ''ம' வையும் சேர்த்து , , சிவனும் நாராயணனும், ஹரியும் ஹரனும் சேர்ந்த நாமமாக ' ராம' எனும் பெயரை வைத்தார் வசிஷ்டர்.
மொத்தத்தில் எல்லா ஹிந்துக்களும் வணங்கி அருள்பெறவேண்டியவன் ராமன்.
''நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ''ராம'' என் றிரண்டெழுத்தினால்”
நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கரோனாவை அவன் கருணையோடு அழிப்போம்.
--