SRI KRISHNA'S END

Started by Private User on Monday, March 23, 2020
Problem with this page?

Participants:

  • Private User
    Geni member
Private User
3/23/2020 at 5:05 AM

SRI KRISHNA’S END

நல்லதை நினைப்போம்; நல்லதை செய்வோம்.....
துவாரகையை ஆட்சிபுரிந்த கண்ணன் தெய்வமாக இருந்தாலும், பூலோகத்தில் மானிடராக அவதரித்ததால் முக்தி (மரணம்)என்பது தவிர்க்க முடியாதது. தன் இறுதிக் காலம் நிறைவுறப் போகிறது என்பதை அறிந்த பகவான் ஒருநாள் ஹிரண்ய நதிக்கரையினையொட்டி அடர்ந்த புதர்கள் நிறைந்த குரா மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது "ஜரா"என்ற வேடன் ஒரு காட்டு முயலைத் துரத்திக் கொண்டு வந்தான். அது புதர்ப் பகுதியில் ஓடி மறைந்தது. அந்த வேளையில் கிருஷ்ணரின் கால்களில் ஒன்று வேடன் கண்களுக்கு முயல்போல் தெரிய, மறைந்திருந்து அம்பு எய்தான். அந்த அம்பு பகவானின் வலது குதிங்காலில் பலமாகத் தைத்ததும், "ஆ' என்ற அலறல் சத்தம் கேட்டு பதறினான் வேடன்; ஓடோடி வந்தான். அங்கே பகவான் *கிருஷ்ணர்* காலில் அம்பு தைக்கப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்ட வேடன், "பகவானே! உங்கள் பாதம் எனக்கு முயல் போல் தெரிந்ததால் மறைந்திருந்து அம்பு எய்தேன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று கதறினான்.
வேடனே, வருந்தாதே. நாம் செய்த பாவங்கள் நம்மைப் பின் தொடர்ந்து வரும். தெரியாமல் செய்த பாவங்களை இப்பிறவியிலேயே பரிகாரங்கள் மூலம் நிவர்த்தி செய்திடலாம். ஆனால் தெரிந்து செய்த பாவங்களை எந்த வழிபாடுகளாலும் நிவர்த்தி செய்ய முடியாது.
அதற்கு நானே உதாரணம்.
திரேதாயுகத்தில் நான் ராமனாக அவதரித்தபோது, வாலியை மறைந் திருந்து அம்பு எய்து கொன்றேன். அப்போது வாலி, "ராமா, எனக்கும் உனக்கும் என்ன பகை? எங்கள் விலங்கினத்தில் ஒரு பெண்ணை கடத்திச் செல்வது சகஜம். ஆனால், நீ என்னைத் தவறாகப் புரிந்துகொண்டாய். என்னிடம் நேருக்கு நேர் போர்புரிய முடியாது என்பதை அறிந்து, மறைந்திருந்து என்னை வீழ்த்தினாய். இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும்.
தர்மம் என்று ஒன்றிருந்தால், எத்தனை காலமானாலும் உன்னை மறைந்திருந்து வீழ்த்துவேன்' என்று வேதனையுடன் சாபமிட்டான். அந்த சாபம் தான் இன்று பலித்தது.
தெய்வமாக இருந்தாலும் சிறிதளவு நெறி தவறினால் துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும் என்பது பொது விதியாகும்.
இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும்,
யாகங்களும்
தான - தர்மங்களும், வழிபாடுகளும்
கைகொடுக்காது
அதைத்தான் நான் இப்போது அனுபவிக்கிறேன். வேடனே, நீதான் அந்த வாலி உன் சாபத்தினை நிறைவேற்றிவிட்டாய். முன்ஜென்ம நிகழ்வுகள் எதுவும் பூலோகத்தில் பிறந்தவர்களுக்கு நினைவுக்கு வராது. அதனால் உனக்கு இது தெரியவில்லை. என் அவதாரம் இன்றுடன் முடிந்தது.
நீ நீடூழி வாழ்வாயாக'' என்று வாழ்த்திவிட்டு முக்தியடைந்தார் பகவான் கிருஷ்ணர்.
ஒருவருக்கு நாம் செய்யும் தீமை, மீண்டும் நமக்கே வந்துசேரும் என்னும் பேருண்மையை பகவான் தன் இரு அவதாரங்கள் மூலம் மனித குலத்துக்கு உணர்த்தியுள்ளார்.
எனவே, நல்லதையே நினைப்போம்; நல்லதையே செய்வோம். இறைவன் அருளால் எல்லாம்
நலமாகவே நடக்கும்.
ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !
தொகுப்பு: ஸ்ரீ மகாவிஷ்ணு சேவா சங்கம்
சர்வம் விஷ்ணு மயம்

Create a free account or login to participate in this discussion