பொறுமையே பெருமை – ராமாயணக் கதை
-ஊரில் திரியும் காமுகர்கள், கண்ணில் படும் கன்னியருக்கு வலை வீசுவதும், மசியாவிடில் ஆசிட் ஊற்றுவேன், கத்தியால் குத்துவேன் என்று கிளம்பியிருப்பதும் கலிகாலத்தில் விளைவு என்றுதானே நினைக்கிறோம்? அது தான் இல்லை. சாட்சாத் விசுவாமித்திர முனிவரின் அத்தைகளுக்கே அந்த நிலை ஏற்பட்டதாம். அதை பற்றி அவரே ஸ்ரீராமரிடம் தெரிவித்துள்ளார்.
வால்மீகி ராமாயணம் பால காண்டம் 33ம் சர்க்கம் ‘குசநாப உபாக்கியான’ த்தில் இந்த நிகழ்ச்சி பற்றிய விவரம் வருகிறது.
அரக்கர்களை அழித்து விசுவாமித்திர முனிவரின் யாகத்தை காத்த சிறு பிள்ளைகளான ராம, லட்சுமணர்களை உடனே அவர் அயோத்திக்குத் திரும்ப அனுப்பி விடவில்லை.
யாகம் பூர்த்தி ஆனவுடன் சந்தி நேரத்தில் செய்ய வேண்டிய உபாஸனைகளைச் செய்த பின் அன்றிரவை சித்தாஸ்ரமத்திலேயே கழித்தனர் முனிவர்களும் அரச குமாரர்களும்.
மறுநாள் பொழுது புலர்ந்த அளவில் காலைக் கடன்களை முடித்த இளவரசர்கள் முனிவரை அணுகி, மிக மதுரமாகவும் கம்பீரமாகவும், “தங்கள் கட்டளைக்கு கீழ்ப்படியும் கிங்கரர்களான எங்களுக்கு ஆணையிடுங்கள், முனி சிரேஷ்டரே! செய்து முடிக்கிறோம்” என்று பணிந்து நின்றனர்.
அப்போது விச்வாமித்திரரை முன்னிட்டு, உடனிருந்த முனிவர்கள் ஸ்ரீராமனைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள், “மிதிலா நகர அரசர் பரம தர்மவான். அவர் ஒரு தார்மீகமான யாகம் செய்கிறார். நாங்கள் அங்கு செல்கிறோம். நீயும் அங்கு வரத் தக்கவன். அங்கே ரத்தினம் போன்ற ஒரு தனுசும் உள்ளது” என்றனர்.
இவ்வாறு கூறிவிட்டு, “ஜனகரின் வம்சத்தில் பூர்வீகரான தேவராதன் என்ற அரசனுக்கு பரமேஸ்வரன் அந்த தனுஸை அளித்தான். ஜனகர் அதனை தினமும் பூஜிக்கிறார். பார்க்க பயங்கரமாக இருக்கும் அந்த வில்லை தேவர்களோ கந்தர்வர்களோ அசுரர்களோ கூட தூக்கி நாணேற்ற இயலாது. மனிதர்களால் எவ்வாறு முடியும்?” என்றார்கள்.
பின் அவரகள் ஒப்பற்ற சித்தாஸ்ரமத்தைப் பிரதக்ஷிணம் செய்து வடக்கு திசையை உத்தேசித்து புறப்பட ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான வண்டிகளில் அந்த முனிவர்கள் தங்கள் அக்னி ஹோத்திரத்தை எடுத்துக் கொண்டு யாத்திரை கிளம்பினர். அது கூட ஒரு விதத்தில் கல்யாண ஊர்வலம் தானே!
சித்தாஸ்ரமத்தில் வசிக்கின்ற மிருகங்களும், பக்ஷிகளும் கூட கூட்டம் கூட்டமாக மகாத்மாவான விச்வாமித்திரரைப் பின் தொடர்ந்தன. அவற்றைத் திரும்ப அனுப்பி விட்டு வெகு தூரம் பயணித்து, சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் சோணா நதிக்கரையை நெருங்கினர்.
ஸ்நானம் செய்து அக்னி ஹோத்திரம் செய்தவர்களாய் அளவற்ற தேஜஸோடு விச்வாமித்திரரைச் சுற்றிலும் அமர்ந்து கொண்டனர். லட்சுமணரும் ராமனும் அந்த முனிவர்களை எல்லாம் நமஸ்கரித்து விச்வாமித்திரனின் அருகில் அமர்ந்தனர். பின், “பகவான்! செழிப்பான சோலைகளோடு விளங்குகிற இது யாருடைய தேசம்? கேட்க விரும்புகிறேன்” என்றான் ராமன்.
ரிஷிகளின் மத்தியில் அமர்ந்திருந்த விசுவாமித்திரர் மிக உற்சாகமாக அந்த தேசத்தின் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். அது அவருடைய வம்ச சரித்திரமும் கூட.
பிரம்மாவின் குமாரரான மஹா தபஸ்வி ‘குசர்’ என்பவர். அவருக்கு நான்கு குமாரர்கள். தர்மிஷ்டர்களான, உண்மையே பேசுபவர்களாக விளங்கிய ‘குசநாபி’ முதலான அந்த புத்திரர்களை பார்த்து, குச மஹாராஜா, “நகரங்களை நிர்மாணித்து பரிபாலனம் செய்யுங்கள்” என்று ஆணையிட்டார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.
தர்மாத்வாவும் ராஜ ரிஷியுமான குசநாபருக்கு ‘கிருதாசி’ என்ற மனைவி மூலம் ஒப்பற்ற நூறு பெண் குழந்தைகள் பிறந்தனர். கல்வியும் அடக்கமும் அழகும் ஒழுக்கமும் நற்பண்புகளுமாக வளர்ந்து சங்கீதத்திலும் நாட்டியத்தில் சிறந்து விளங்கினார் அப்பெண்கள்.
யௌவனப் பருவமடைந்த அந்த கன்னிகைகள் சிறந்த ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு மின்னல் கொடிகள் போல சிங்காரத் தோட்டத்தை அடைந்து ஆடியும் பாடியும் ஆனந்தமாய் விளங்கினார்.
இனிமையான அவயவங்களோடும் ஒப்பற்ற அழகோடும் ஆடிப் பாடிக் களித்த அவர்களை, எல்லா உயிரினங்களுக்கும் பிராணனாக விளங்கும் வாயு பகவான் பார்த்தார். அவர்கள் எதிரில் தோன்றி, “நான் உங்கள் மேல் மோகம் கொண்டுள்ளேன். எனக்கு மனைவி ஆகுங்கள். இந்த மனித உருவை விடுத்து தீர்காயுவைப் பெறுங்கள். பூமியின் மேல் இளமை நிலையற்றது. ஆனால் உங்களுக்கு நீங்காத யௌவனத்தோடு கூடிய அமரத்தன்மையை அருளுகிறேன்” என்றார்.
அப்பெண்கள் வாயு தேவனை பார்த்து சிரித்து, தர்ம நியாயத்தை எடுத்துச் சொன்னார்கள். “வாயு தேவனே! உயிரினங்களின் உள்ளே ஊடுருவிப் பிரவேசிக்கிறாய் அல்லவா? ஆயினும் எம் உள்ளத்தை எள்ளளவும் அறிந்து கொள்ள முடியவில்லையே உன்னால்! குசநாதரின் புதல்விகளான நாங்கள் உன்னை தேவன் என்ற நிலையிலிருந்து நீக்கும் சமர்த்தர்கள். ஆனாலும் தவத்தைக் காப்பாற்றுகிறோம். எனவே உன் தீய எண்ணத்தை விட்டு விடு. உண்மை பேசுகிற எங்கள் தகப்பனாரை அவமதிக்காதே! எங்கள் தகப்பனார் எங்களுக்கு சிறந்த தெய்வம். அவர் யாருக்கு எங்களை மணம் செய்து கொடுக்கிறாரோ அவரே எங்கள் கணவர் ஆவார்” என்றனர்.
வாயு தேவனுக்கு கன்னியரின் அந்த வார்த்தைகள் பிடிக்கவில்லை. மிகுந்த கோபத்தை அடைந்து அவர்களின் எல்லா அவயவங்களிலும் புகுந்து குடைந்து அவற்றை சக்தியற்றவையாக ஆக்கி அவர்களை கோணல் மாணலாக முடமாக்கிவிட்டு நகர்ந்து சென்றார்.
பலவீனமாக எழுந்து நிற்க திராணியற்றவர்களாகிப் போன அப்பெண்கள் தம் நிலை கண்டு வியந்தனர். வெட்கமடைந்தனர் கண்ணீர் விட்டனர். அப்படிப்பட்ட நிலையில் அரண்மைக்கு வந்து விழுந்த இளவரசிகளைப் பார்த்து தந்தை திடுக்கிட்டார்.
“புத்திரிகளே! இது என்ன? சொல்லுங்கள். யார் தர்மத்தை அவமானம் செய்பவன்? எவனால் கூனிகளாக ஆக்கப்பட்டீர்கள்? யார் இந்த நித்திக்கத்தக்க காரியம் செய்தவன்?” என்று வினவினார்.
நூறு பெண்களும் தந்தையின் பாதத்தை சேவித்து, ” தந்தையே! எல்லோருடைய உள்ளத்திலும் உள்ளவனான வாயு பகவான் தர்ம மார்க்கத்தை அனுசரிக்க வில்லை. கெட்ட வழியை அடைந்து அவமானம் செய்ய விரும்புகிறான். அந்த வாயு பகவான் காம வசத்தை அடைந்தான். “தந்தை உடையவர்களாக இருக்கிறோம். நாங்கள் சுதந்திரமானவர்கள் அல்லர். நீர் எம் பிதாவைக் கேளும். எங்களை உமக்கு விவாகம் செய்து கொடுப்பாரெனில் உமக்கு பாக்கியம்” என்று நாங்கள் கூறிய தர்ம மார்க்கத்தை ஏற்காமல் அந்த வாயு எங்களை மிகவும் சிட்சித்து விட்டான்” என்றனர்.
அவர்களுடைய வார்த்தையைக் கேட்டு தர்மாத்மாவும் மகா தேஜஸ்வியுமான குசநாப ராஜா, ஒப்பற்ற அந்த நூறு கன்னிகைகளைப் பார்த்து, “புத்திரிகளே! பொறுமையைக் கடைப்பிடித்துளீர். ஒற்றுமையாக இருந்து என்னுடைய குல கௌரவத்தைக் காத்துள்ளீர். பொறுமையே பெண்களுக்கும் ஆண்களுக்கும் அழகு. உங்கள் பொறுமை ஈடு இணை இல்லாத உயர்வானது. எல்லோரும் ஒருமனதாக பாராட்டத் தக்கது.
க்ஷமா தானம் க்ஷமா சத்யம் க்ஷமா யஞ்ஞஸ்ய புத்ரிகா:
க்ஷமா யஸ: க்ஷமா தர்ம: க்ஷமாயாம் விஷ்டிதம் ஜகத்
புத்ரிகளே! பொறுமை தானம், பொறுமை சத்யம், பொறுமை யாகம். பொறுமை கீர்த்தி. பொறுமை தர்மம். பொறுமையில் உலகம் நிலை நிற்கிறது” என்றார்.
பின் கன்னிகைகளை உள்ளே அனுப்பி விட்டு, அவர்களுக்கு விவாகம் செய்து கொடுப்பதற்கு தகுந்த காலம், இடம், மணமகன் பற்றி மந்திரிகளோடு கலந்து ஆலோசித்தார்.
இதற்கிடையில், ஆசார சீலரான சூலி என்ற மகா முனிவர் பரப்பிரம்மத்தை தியானம் செய்து வந்தார். அவருக்கு ஊர்மிளையின் மகளான ‘சோமதை’ என்ற பெயருடைய கந்தர்வப் பெண் பணிவிடை செய்து வந்தாள். ஒரு நாள் முனிவர் அவளிடம் சந்தோஷமடைந்தவராய், “காலம் உசிதமாக இருக்கிறது. உனக்கு சௌபாக்கியம் உண்டாகட்டும். என்ன வேண்டுமோ கேள்” என்றார்.
சோமதை மகிழ்ச்சி கொண்டு, “பிரம்ம தேஜஸால் நிரம்பிய தவ மகிமையோடு கூடிய ஒரு புதல்வனை விரும்புகிறேன். தங்களை திருமண பந்தத்தில் ஈடுபடுத்த விரும்ப வில்லை. மகனை அருளினால் போதும்” என்றாள்.
அவளை மெச்சியவராய், சூலி முனிவர், தன் மனதால் சங்கல்பித்து ‘பிரம்ம ரிஷி பிரம்ம தத்தன்’ என்று புகழ் பெறப் போகும் சிறந்த புதல்வனை அருளினார். அவன் ‘காம்பலி’ என்ற நகரத்தை தேவேந்திரன் தேவலோகத்தை ஆண்டது போல் வைபவத்தோடு அரசாண்டு வந்தான்.
இந்த பிரம்ம தத்தனுக்கு வெகு தர்மிஷ்டனான குசநாபன் தன் நூறு கன்னிகைகளையும் விவாகம் செய்து கொடுக்க நிச்சயம் கொண்டான்.
உடல் கூனி முடங்கிப் போன பெண்களுக்கு உத்தமமான ஆணழகனை மணம் முடிக்க எண்ணுவது சரியா? என்று நமக்கு இப்போது தோன்றலாம். ஆனால் அன்றைய சமுதாய அமைப்பு அந்த தந்தைக்கு அப்படி ஒரு தைரியத்தை அளித்தது. வெளிப் பார்வைக்கு தன் பெண்கள் விகாரமாகக் காணப்பட்டாலும் அவர்களின் அந்தரங்க அழகுக்கும் குணங்களுக்கும் பொருத்தமான வரனைத் தேடிக் கண்டார் தந்தை. எனவே, பிரம்மதத்தனையே தன் பெண்களுக்கான மாப்பிளையாகத் தீர்மானித்தார்.
அதே போல் வாயுதேவன் செய்த அதிகப் பிரசங்கித் தனமும் குசதேவ குமாரிகளின் பொறுமையும் குறித்த செய்திகள் அங்கிருந்த பிற அரசர்கள் மத்தியிலும் வியாபித்திருந்ததால், அங்கஹீனம் இருந்தாலும் அறிவில் நிறைந்திருந்த அக்கன்னியரை பிரம்மதத்தன் மணம் புரிய சம்மதித்தான். எண்ணிக்கையில் நூறு பெண்களாக இருந்தாலும் எண்ணத்தில் ஒரே இயல்பு கொண்டவர்களாக குசநாப கன்னிகைகள் விளங்கினர்.
திருமண ஏற்பாடுகள் விரைவாகவும் விரிவாகவும் நடந்தேறின. மண மண்டபத்தில் பிரம்மதத்தரை அழைத்து மிக சந்தோஷமான மனதோடு நூறு கன்னிகைகளையும் கன்னிகாதானம் செய்து கொடுத்தார் தந்தை.
பாணிக்கிரகணம் செய்து கொள்ள முன்வந்த பிரம்மதத்தன் அப்பெண்களின் கைகளை ஸ்பரிசித்தான். என்ன விந்தை? கைகள் பற்றப்பட்ட உடனே அப்போதுவரை இருந்த குரூபமும் மனக்கவலையும் நீங்கிவர்களாய் அந்த நூறு கன்னிகைகளும் அதிக வைபவத்தோடு விளங்கினார்கள்.
அங்கங்களின் அவலட்சணங்கள் அரை நொடியில் மாயமாகி சர்வாலங்கார பூஷிதைகளாக நிமிர்ந்து நின்றனர் குசநாப குமாரிகள். மனதிலும் உடலிலும் ஒட்டியிருந்த குறைகள் விலகின. வாயுவின் பிடிப்புகள் நீங்கி அவயவங்கள் பூர்வ அழகை மீண்டும் பெற்றன.
அப்பெண்களை மனைவிகளாக அடைந்த பிரம்மதத்தன் ஆனந்தத்தோடு தன் நகரம் மீண்டான். அவன் தாய் சோமதை மருமகள்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள். ஒவ்வொரு பெண்ணையும் தனித்தனியாகத் தொட்டு தழுவி அவர்களின் பொறுமையையும் கற்பையும் போற்றினாள். அவ்விதம் அவர்களை வளர்த்த குசநாதரை புகழ்ந்தாள். தன் புத்திரன் செய்த உத்தமமான வைதீக கர்மாக்களை எண்ணி மகிழ்ந்தாள்.
ஒரு மாமியார் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறாள் சோமத்தை. ‘இன்னும் ஒரு அரை அங்குலம் உயரம் இருந்திருக்கலாம். கொஞ்சம் நிறம் குறைவு தான். மூக்கு எடுப்பாக இருந்தால் நன்றாயிருந்திருக்கும்’ என்றெல்லாம் வீட்டுக்கு வந்த மருமகளை உரசிப் பார்க்கும் மாமியார்களைப் பார்த்து பழகிய நமக்கு சோமதை ஒரு தெய்வீக மாமியாராகத் தென்படுகிறாள்.
இக்கதையில் ஒவ்வொருவரும் ஒரு நற்பண்புக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்கள். ராமாயணம் காட்டும் பாரத நாட்டு கலாச்சாரம் இது. பொறுமை என்னும் இனிய குணத்தை பிரதானமாக இக்கதை விளக்கிக் காட்டுகிறது. பெண்கள் திருமணத்திற்கு முன் எவ்வாறு விளங்க வேண்டும்? தந்தை எப்படி அவர்களை வளர்க்க வேண்டும்? மணமகனும் மணமகளும் உடலழகை அல்லாது உள்ளத்து அழகை கிரகிக்க வேண்டும் என்ற பல படிப்பினைகளை விளக்கிக் கூறும் இந்த கதை இக்காலப் பெற்றோரும் திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களும் ஆண்களும் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் கொண்டது.
பெண்கள் விவாகமாகிச் சென்றபின்பு குசநாபர் புத்திரனிலாத குறையை உணர்ந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாகம் நடந்தேறிய தருணத்தில் பிரம்மாவின் புத்திரரான குசநாபரின் தந்தை ‘குசர்’ அவருக்கு தரிசனமளித்து, “மிக தர்மிஷ்டனான ‘காதி’ என்ற பெயரோடு விளங்கும் நிலைத்த கீர்த்தியை அளிக்கும் புதல்வன் பிறப்பான்” என்று ஆசிர்வதித்து பிரம்மா லோகம் சென்றார்.
சில காலம் சென்ற பின் குசநாதருக்கு ‘காதி’ என்னும் மிகுந்த ஆசார சீலனான மகன் பிறந்தான். அந்த பரம தர்மிஷ்டரான ‘காதி’ யே விசுவாமித்திரரின் தந்தை. குச வம்சத்தில் பிறந்ததால் அவருக்கு கௌசிகன் என்றும் பெயர் உண்டு.
மேலும், விச்வாமித்திரருக்கு ‘ஸத்யவதி என்ற ஒரு சகோதரியும் உண்டு. அவள் ரிசீகரென்ற ரிஷிக்கு மணமுடிக்கப்பட்டாள்.. சிறந்த விரதமுடைய சத்தியவதி கணவரை அனுசரித்து சரீரத்தோடு சொர்கம் சென்றாள். அவள் மிக கம்பீரமான ‘கௌசிகீ’ நதியாக மாறினாள். திவ்யமான புண்ணிய தீர்த்தம் உடையவளாய் ரமணீயமான இமயமலையில் உலகத்திற்கு நன்மை செய்யும் நதியாக பிரிவாகிக்கிறாள் சத்தியவதி. விசுவாமித்திரர் தன் சகோதரியின் மீதுள்ள அன்பால் இமயமலைச் சாரலில் கௌசிகீ நதிக்கரையில் எப்போதும் வசித்து வருகிறார்.
இதுவே புண்ணியத்தை அளிக்கும் குசநாபா உபாக்கியானம்.